நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்னும் சிலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் தெரிவித்த இரங்கல் பதிவுகளை இங்கே பார்க்கலாம்.
”திரைப்பட இயக்குநரும், திரைப்பட நடிகரும், வெளிப்படையாகப் பேசும் தன்மை கொண்டவரும், ’எதிர்நீச்சல்’ தொடர்மூலம் மக்கள் மனதில் இடம்பெற்றிருந்தவருமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொண்ணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். மாரிமுத்துவின் இழப்பு திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
“திரைப்பட இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மாரிமுத்து அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்.
சகோதரர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று சசிகலா தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
”தன்னம்பிக்கை நிறைந்த தனித்துவமான உழைப்பால் உயர்ந்த நடிகர். குடும்பத்திற்கு மட்டும் பேரிழப்பு அல்ல. திரை உலகத்துக்கு மட்டும் பேரிழப்பு அல்ல. பகுத்தறிவு உலகுக்கு ஏற்பட்ட இழப்பு. இந்த ஆண்டு திராவிடர் கழகம் சார்பில் பெரியார் விருது கொடுக்கப்பட இருந்த நிலையில். மாரிமுத்து மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது” என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
”மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” என்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
”திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான மாரிமுத்து மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
மாரிமுத்து பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
”நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இழப்பு. அவர் இறப்பு எல்லாருக்கும் பெரும் நெருக்கத்தை உண்டாக்கி விட்டது. நல்ல அரசியல் சமுதாயத்தை விரும்பக்கூடிய நல்ல மனிதரை இழந்து விட்டோம்.
’கர்ணன்’, ’மாமன்னன்’ படங்களில் இல்லாதது பற்றி செல்லமாக சண்டை போட்டு இருக்கிறார். நிச்சயமாக அடுத்த படங்களில் நடிக்க பேசியிருந்தேன். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நிச்சயமாக அவர்களை இழந்து வாழக்கூடிய குடும்பத்திற்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்” என்று நேரில் அஞ்சலி செலுத்திய பின் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
”எனது வாழ்க்கைரீதியாகவும் நட்புரீதியாகவும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அண்ணன் மாரிமுத்து. எல்லா ரசிகர்களின் வாழ்க்கைக்கும் குடும்ப நண்பராக இருந்தவர் மாரிமுத்து. தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு அனைவருக்கும் மிகப்பெரிய கஷ்டம் வருத்தம் அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவர் இயற்கை மரணம் எய்தது வேதனை அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்” என்று பின்னணி பாடகர் வேல்முருகன் தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
”தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம்ஆடி அடங்கியது. சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன் என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன். தேனியில் நான்தான் திருமணம் செய்துவைத்தேன். இன்று அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன். குடும்பத்துக்கும் கலை அன்பர்களுக்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறேன்” என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
”திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்பிரபலங்கள் பலரும் மறைந்த மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து அவரது தேனி மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளது.