நீலகிரியில் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் உலா வந்த சிறுத்தை, கரடிகள் யாவும் வளாகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கேமரா காட்சிகள், அந்த வளாகத்தில் உள்ள பணியாளர்களிடையே பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளை தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது வனத்துறை.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் அருகே உலா வருவது வழக்கம். இந்நிலையில் உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் குடியிருப்பில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் நுழைந்த ஏழு வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று ஆட்சியர் குடியிருப்பு நுழைவாயிலில் புகுந்த சாலையில் நடந்து சென்று பின்னர் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வாசலில் சிறிது நேரம் ஓய்வெடுத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அந்த சிறுத்தை மீண்டும் பின்வாசல் வழியாக வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
இந்த காட்சிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் காட்சிகள் வெளியானதை தொடந்து அங்குள்ள பணியாளர்கள் இரவு நேரத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.