சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனியார் பூச்சி மருந்து கம்பெனியில் பயிர் ஆய்வு மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். ஆத்தூர் மகளிர் காவல் நிலையம் எதிரில் இந்த கம்பெனி உள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல தான் வேலை செய்யும் பூச்சி மருந்துகடைக்கு வந்த அவர், அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். அப்போது வேலை தொடர்பாக வெங்கடேசன் உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், அவருடைய வாகனத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அதனை திருடிச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
வெங்கடேசனின் இருசக்கர வாகனத்தை திருட ஏதுவாக டோப் செய்ய மற்றொரு வாகனத்தையும் அவர்கள் கொண்டுவந்துள்ளனர். “சரி நம்மள யாரும் பார்க்கல” என்று தனது சொந்த வாகனத்தை எடுப்பதுபோல், வெங்கடேசனின் வாகனத்தை எடுத்த அவர்கள், டோப் செய்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான அனைத்து காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், வாகனத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று வண்டியை பறிகொடுத்த வெங்கடேசன் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.
அனைத்து மகளிர் காவல் நிலையம், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், போக்குவரத்து காவல் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ள அந்த பகுதியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.