தன் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்க வேலுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில், அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிடக் கோரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.-யாக இருந்த காதர் பாட்சா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டுமென நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஜூலை 22ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.
இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் அவரது வழக்கறிஞர் வி.செல்வராஜ் முறையீடு செய்தார். இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த மனுவை விசாரிக்க வேண்டுமெனவும் முறையீடு செய்யப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்த பிறகு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளை கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு மட்டுமே விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூடுதல் மனுவை பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.