தீனதயாளனோடு தொடர்பில் இருந்தது பொன் மாணிக்கவேலா, காதர் பாஷாவா? - விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிஐ!

சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளனோடு தொடர்பில் இருந்தது யார்? - முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலா? டி.எஸ்.பி காதர் பாஷாவா? - விசாரணையை தீவிரப்படுத்தும் CBI.
பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல்கோப்புப்படம்
Published on

கடந்த 2008 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகளை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி காதர் பாஷா, காவலர் சுப்பராஜ் ஆகியோர் சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிலையை கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான டிஎஸ்பியான காதர் பாஷா, கோயம்பேடு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் மீது குற்றசாட்டு எழுந்து 2017ம் ஆண்டு ஜூன் 29 -ஆம் தேதி காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

முன்னாள் டி.எஸ்.பி காதர் பாஷா
முன்னாள் டி.எஸ்.பி காதர் பாஷாகோப்பு படம்

இதற்கிடையே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின், நெல்லையில் பழம்பெரும் கோயில் சிலைகள் கடந்த 2007ம் ஆண்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவத்தில் டி.எஸ்.பி காதர் பாஷாவுக்கு தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில், “பொன்.மாணிக்கவேல் பழிவாங்கும் நோக்கில் எனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்துகொண்டதுடன் மட்டுமல்லாமல் அதற்கு இடைஞ்சலாக இருந்த என்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். ஜாமீனில் விடுதலையான என்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.,க்கும் மனு அளித்தேன். அவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் என் புகாரின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற ஜஜி பொன் மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டார். மேலும் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு கடந்த 2017 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷா மற்றும் காவலர் சுப்புராஜ் மீது போடப்பட்ட வழக்கை அடிப்படையாக வைத்து சிபிஐ முதல் தகவல் அறிக்கையை கடந்த 2023 ம் ஆண்டு பதிவு செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் டி.ஐஜி லவ்லி காட்டியார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் மற்றும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷா இருவரில் யார் குற்றவாளிகள் என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் அதன் உண்மைத்தண்மை குறித்து CBI தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை பாலவாக்கம் காமராஜர் சாலையிலுள்ள ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் வைத்து இன்று காலை 8 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக 2008 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இரண்டு வழக்கு பதிவுகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது இந்த இரண்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் ஆவணங்களையும் அடிப்படையாக வைத்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் வீடு
முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் வீடுபுதிய தலைமுறை

2022 ம் ஆண்டு உயிரிழந்த சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவி செய்தது IG பொன் மாணிக்கவேலா? அல்லது DSP காதர் பாஷாவா? என்று அதிகாரிகள் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். 2008 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட காலங்களில் டிஎஸ்பி காதர் பாஷா மற்றும் ஐஜி பொன்மாணிக்கவேல் ஆகியோரின் வங்கி கணக்குகள் குறித்தும் என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்தும் அது தொடர்பான ஆவணங்களை வைத்து தற்போது பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.ஜி பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் பெறும் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டி.எஸ்.பி காதர் பாட்ஷா மற்றும் அருள்ராஜ் ஆகியோருக்கு சம்மன் அளித்து நேரில் விசாரணை செய்து யார் சொல்வது உண்மை, யார் மீது தவறு என்பது குறித்த அறிக்கையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com