சுஷாந்த் சிங் வழக்கால் சாத்தான்குளம் வழக்கு ஆய்வில் தாமதம் : நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

சுஷாந்த் சிங் வழக்கால் சாத்தான்குளம் வழக்கு ஆய்வில் தாமதம் : நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
சுஷாந்த் சிங் வழக்கால் சாத்தான்குளம் வழக்கு ஆய்வில் தாமதம் : நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
Published on

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் வழக்கில் அக்டோபர் முதல்வாரத்தில் ஆவணங்களை ஆய்வு செய்வர் என சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து வழக்காக விசாரித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. வழக்கு விசாரணையை அரசு சிபிஐக்கு மாற்றிய நிலையில், ஆவணங்கள் அழிக்கப்படக்கூடாது எனும் நோக்கில் சிபிஐ வழக்கை கையிலெடுக்கும் வரை சிபிசிஐடி வழக்கை விசாரிக்குமாறு ஜூன் 30 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், ஜூலை 10 ஆம் தேதி, சிபிஐ வழக்கு விசாரணையை கையில் எடுத்தது. சம்பந்தப்பட்டவர்களில் 8 பேரை காவலில் எடுத்தும் விசாரித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் நிலை அறிக்கைகள் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில்," சாத்தான்குளம் காவல் நிலைய எல்லையில், காவலர்கள் குடியிருப்பில் இதே போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து, அது தொடர்பான விபரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் காவல்துறையினர் எங்கிருந்தாலும் காவல்துறையினர் தான் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் இடங்களிலும் அதன் பார்வை படாத இடங்கள் என இருக்கத்தான் செய்கிறது என கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த மருத்துவர் மதிகரன் தரப்பில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் உண்மை நிலையை வெளிக்கொணர இன்னும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவரையும் வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரின் உடற்கூராய்வு அறிக்கையை வழங்குமாறு தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், வழக்கு விசாரணை முழுவதுமாக முடியாத நிலையில் அது தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது என தெரிவித்தனர்.

சிபிசிஐடி தரப்பில் ராஜாசிங் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது தற்போது வரை 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாகவும் 12 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ தரப்பில்," தந்தை- மகன் மரணம் தொடர்பான தடயங்களை மத்திய தடய அறிவியல் துறையின் பல்துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய உள்ளனர். தற்போது நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான தடயங்களை ஆய்வு செய்துவரும் நிலையில் அக்டோபர் முதல்வாரத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com