செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சுமார் 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவீன், சதீஷ், பெருமாள் ஆகியோர், “பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூபாய் 4 கோடி பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது. பணப்பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது” என வாக்குமூலம் அளித்தனர். இவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இவ்வழக்கில் முக்கியமான நபராக பார்க்கப்படும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்துள்ளனர். வருகிற 31ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போல பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு துணை தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் உண்மையிலேயே நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதுதானா? யாரிடமிருந்து ரூ 4 கோடி பணம் பெறப்பட்டு கொண்டு செல்லப்பட்டது? இவ்விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்ற முழு விவரங்களும் இவர்களிடம் விசாரணை நடத்திய பின்பே தெரியவரும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.