சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோவை நீக்கும்படி சிபிசிஐடி போலீஸார் தன்னை அச்சுறுத்தினார்கள் என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வழக்கு சிபிஐ தரப்புக்கு மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக யாரும் எழுத்து மற்றும் வீடியோ மூலமாக சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாடகி சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சாத்தான்குளம் தந்தை-மகன் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்திருந்தனர். இதையடுத்து சுசித்ராவின் வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிசிஐடி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கிடையே சுசித்ரா தனது வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.
ஆனாலும் இன்னும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் உலவிக்கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை அனைவரும் நீக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசியின் வீடியோவில் இருக்கும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அது போலீசாருக்கு எதிராக தூண்டிவிடுவதைப் போல இருப்பதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. எனவே அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அதை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீடியோ நீக்கப்பட்டது குறித்து சுசித்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "சிபிசிஐடி போலீசார் அழைத்தார்கள். போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படி நான் வீடியோவை நீக்கியிருக்கிறேன். மக்கள் இந்த வழக்கை கவனிக்க வேண்டும். பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.