புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்றுடன் 120 வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இதுவரையில் ஒன்பது போலீசார் உட்பட 153 பேரிடம் அவர்கள் விசாரணை நடத்தி சாட்சியம் பெற்றுள்ளனர்.
இதனிடையே சம்பவம் நடந்தபோது குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் எடுக்கப்பட்ட மனிதக்கழிவின் மாதிரி சென்னை தடவியல் அறிவியல் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அதில் மூன்று பேரின் மரபணு இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 119 பேருக்கு ஒவ்வொரு கட்டமாக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டனர்.
அதன்படி டிஎன்ஏ பரிசோதனைக்கு வேங்கைவயல், இறையூர், முத்துக்காடு கிராமங்களை சேர்ந்த 11 நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதில் மூன்று நபர்கள் மட்டுமே ஆஜராகி ரத்த மாதிரி கொடுத்திருந்தனர். (ரத்த மாதிரி பரிசோதிப்பதென்பது, டிஎன்ஏ பரிசோதனையின் ஒருபகுதி)
இந்நிலையில் அடுத்த கட்டமாக இறையூர் மற்றும் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 10 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டுமென்றும், அதற்கு அவர்கள் ரத்த மாதிரி கொடுப்பதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராக வேண்டுமென்றும் சிபிசிஐடி போலீசார் அவர்களுக்கு சம்மன் கொடுத்துள்ளனர்.
கடந்த முறை ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் ஏற்பாடு செய்தபோது, 8 பேர் அதற்கு வரவில்லை. ஆகவே தற்போது அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த பரிசோதனை வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று நடைபெறலாம் என்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எடுத்து முடிக்கப்பட்டதும் அடுத்தடுத்த கட்டங்களாக 119 நபர்களுக்கும் முழுமையாக டிஎன்ஏ மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.