மகேந்திரன் மரணத்திற்கு மாரடைப்பே காரணம் என்று சிபிசிஐடி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை சட்டவிரோத காவலில் வைத்து காவலர்கள் சித்ரவதை செய்தததாகவும், இதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும், அவரது தாய் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மகேந்திரன் மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சிபிசிஐடி தரப்பில் நிலை அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அதனைப் பார்த்த நீதிபதி,"மகேந்திரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டுள்ளது" என தெரிவித்தார். அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், “இருப்பினும் மகேந்திரனை சட்டவிரோத காவலில் வைத்ததற்காக தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சார்பு ஆய்வாளர், ரகுகணேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.