செய்தியாளர்: சுப முத்துப்பழம்பதி
வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 566 நாட்கள் ஆகிவிட்டன. இந்த வழக்கை 546 நாட்களாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில், இதுவரை 330 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நேரடி சாட்சியம் பெற்றுள்ளனர்.
31 பேருக்கு மரபணு சோதனையும், 5 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் குற்றவாளிகளை இன்னும் கண்டறிய முடியாததால் இதுவரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத கால அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் 14 ஆவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஏழாம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இன்னும் இரண்டு வார காலத்திற்குள் இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கோரப்பட்டுள்ளது.