கர்நாடகத்தில் மழை பெய்து வரும் நிலையிலும் தமிழகத்திற்கான உரிய நீர் கிடைக்கவில்லை என்பதை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தும் எனத் தெரிய வந்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் மீண்டும் வரும் 25ஆம் தேதி கூடுகிறது. இதில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா ஏன் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தற்போது வரை 4.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை தமிழகத்துக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கும் போது கூட, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவில்லை என ஆணையத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ஜூன் 25ஆம் தேதி காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் ஜூலை மாதத்தில் 30 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடவும் தமிழக அரசு வலியுறுத்தும் எனக் கூறப்படுகிறது.