தமிழ்நாடு, கர்நாடகா கருத்து வித்தியாசங்களை உச்சநீதிமன்றமே தீர்த்துவைக்க வேண்டும் என சட்ட அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளதால் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நரேந்திர மோடி அமைச்சரவை பரிசீலனைக்கு அனுப்பியுள்ள பரிந்துரையில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. நீர்வளத்துறையின் காவேரி நீர் பங்கீடு திட்டத்தை சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி மத்திய அரசின் தலைமை செயலகம் கருத்து கேட்டிருந்தது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நிலைப்பாடு வேறுபடுவதால், உச்சநீதிமன்றத்தின் அறிவுரை தேவை என சட்ட அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் இன்று நரேந்திர மோடி அமைச்சரவை காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற கெடுவுக்குள் அமைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது
.காவேரி நீர்பங்கீடு அமைப்பு, அதில் எதன்னை பேர் இடம்பெறவேண்டும், அதன் அதிகாரங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கு இடையே கருத்து வித்தியாசங்கள் உள்ளது. அமைச்சரவை சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்றால், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும்.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்து பிரச்சினையை உச்சநீதிமன்றமே தீர்த்துவைக்கும்படி கேட்டுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை நிராகரித்தால் மட்டுமே, தாமதம் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தாமதத்துக்கே வழிகோல்கிறது என ஏற்கெனவே அரசியில் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வழக்கு மீண்டும் நீதிமன்றத்துக்கே சென்றால், பல மாதங்கள் தாமதம் ஏற்படலாம் என்றும் அதற்குள் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிந்து விடும் என்றும் வழக்கறிஞர்கள் கருதுகிறார்கள்.