15 மாத ‘தேக்கடி’ புலிக்குட்டிக்கு கண்புரை நோய்; அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மருந்து

15 மாத ‘தேக்கடி’ புலிக்குட்டிக்கு கண்புரை நோய்; அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மருந்து
15 மாத ‘தேக்கடி’ புலிக்குட்டிக்கு கண்புரை நோய்; அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மருந்து
Published on

தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட மங்கலதேவி கண்ணகி கோவில் பகுதியில் தாயை விட்டுப்பிரிந்த நிலையில் கிடைத்த 15 மாத ‘மங்களா’ புலிக்குட்டிக்கு கண்புரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் இருந்து மருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி - பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைக்கு உட்பட்ட 925 சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ளது தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம். இந்த புலிகள் காப்பகத்தில் கடந்த 2014ம் ஆண்டுகணக்கெடுப்பின்படி 40 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 56ஆக உயர்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியில்அமைந்துள்ள மங்கலதேவி வனச்சரக பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மங்கலதேவி கண்ணகி கோவில் அருகே தாயை விட்டு பிரிந்து தனியே சுற்றித்திரிந்த ஆண் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டது.

இதையடுத்து, புலிக்குட்டியை தாயுடன் சேர்க்கும் பணி தீவிரமடைந்து வந்தது. ஆனால் தாய்ப்புலியை கண்டுபிடிக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றன. இதையடுத்து புலிக்குட்டிக்கு தேசிய புலிகள் ஆணைய அறிவுரைப்படி வனத்துறையின் கால்நடை மருத்துவர் ஷியாம் சந்திரன் தலைமையில் தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் புலிக்குட்டியை முழுவதுமாக பரிசோதித்து சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவ பரிசோதனையில் புலிக்குட்டிக்கு முன்னங்கால்கள் சரிவர செயல்பட முடியாத நிலை இருப்பது கண்டறியப்பட்டதால் புலிக்குட்டிக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. தாய்ப்பால் இல்லாமல் வளரும் இந்த புலிக்குட்டிக்கு அதற்கேற்ற புரதச்சத்துக்கள் அடங்கிய பால் தயாரிக்கப்பட்டு புட்டி மூலம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் இந்த “மங்களா” புலிக்குட்டிக்கு வயது ஒன்பது மாதங்கள் என்றானபோது, அதற்கு இரை தேடும் பயிற்சி அளிக்க தேசிய புலிகள் ஆணையம் உத்தரவிட்டது. இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் இதர புலிகள் வாழும் தேக்கடி புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனத்திற்குள் 10,000 அடி அகலத்தில், 22 அடி உயரத்தில் தனிக்கூண்டு அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமெராக்கள் பொருத்தப்பட்டன.

உலக புலிகள் தினமான ஜூலை 29ம் தேதி, சிறிய கூண்டிற்குள் இருந்த அந்த ஒன்பது மாத புலிக்குட்டி வனத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு அங்கு அமைக்கப்பட்ட பெரிய கூண்டிற்குள் விடப்பட்டது. புலிக்குட்டிக்கு இரை தேடும் பயிற்சிக்காக முதலில் கோழி, முயல் என சிறிய வகை விலங்கினங்கள் கூண்டிற்குள் விடப்பட்டு, நாளடைவில் சிறிய மான்களில் துவங்கி புலிக்கு பிடித்த இதர விலங்கினங்கள் கூண்டிற்குள் விடப்பட்டு இரை தேடும் பயிற்சி அளிக்கப்படும் என புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புலிக்குட்டிக்கு செய்த மருத்துவ பரிசோதனையில், அது கண்புரை காரணமாக கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்கான சிகிச்சை துவக்கப்பட்டது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள வனத்துறை தலைமை கால்நடை மருத்துவர் அருண் ஜகாரியா தலைமையில் நான்கு மருத்துவர்கள் கொண்ட ஆறு பேர் கொண்ட குழுவை நியமிக்கப்பட்டது. விரிவான ஆய்வுக்குப்பின் பின், அமெரிக்காவில் இருந்து ”லானோ ஸ்டெரால்” என்ற மருந்து வரவழைக்கப்பட்டு புலிக்குட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பயன்படுத்துவது இந்தியாவில் இது முதன் முறை என தேக்கடி பெரியார் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து அமெரிக்காவில் உள்ள ஒரு புலிக்கும் இதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் விலை ரூ.16,000. ஒரு மாதத்திற்குப்பின் மருத்துவக்குழு மீண்டும் புலிக்குட்டியை பரிசோதிக்கும் எனவும் கண் புரை நோய் முழுவதும் குணமான பின் புலிக்குட்டி மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்படும் எனவும் புலிக்குட்டிக்கு வேறு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை. தற்பொழுது 40 கிலோ எடை உள்ளது. தற்போது புலிகள் சரணாலயத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு இடத்தில் ”மங்களா” மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- வி.சி.ரமேஷ் கண்ணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com