சமீபத்தில் ராஜராஜ சோழன் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி இருந்தார் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தை விமர்சித்து பேசியது பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இதனையடுத்து இவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் இவர் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இந்தப் பேட்டியில் அவரது குழந்தை பருவம் முதல் அவரை சாதி பின்தொடர்ந்தது குறித்து ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதில், “எனது குழந்தை பருவம் முதல் நான் சந்தித்த சாதிய ஒடுக்குமுறையை என்னுடைய எழுத்துகள் மூலம் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. உதாரணமாக என்னுடைய கிராமத்திலிருந்த மரம், கிணறு அல்லது விளையாட்டு திடல் ஆகிய அனைத்தும் மற்றவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது.
ஆனால் எனக்கு இவ்வற்றை பார்த்தால், இவை எனக்கு சொந்தமானவை இல்லை என்றே சமூகம் கூறுவதே ஞாபகத்திற்கு வரும். எல்லோரும் உபயோகப்படுத்தும் பொருட்களை, பட்டியலினத்தவர் என்ற ஒரே காரணத்தால் எனக்கு ஏன் அனுமதி கொடுக்கப்படவில்லை என்ற எண்ணம் எனக்கு அதிகமாக இருந்தது. எனவே இவற்றை எனது படைப்புகளின் மூலம் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
மேலும் எனது பள்ளி பருவத்தில் எனக்கு தண்ணீர் கொடுத்த விதம் முதல் கடைகளில் எனக்கு சில்லறை திரும்பி கொடுப்பது வரை பல சமயங்களில் சாதிய கொடுமைகளை நான் உணர்ந்துள்ளேன். இந்தச் சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தவை. அதே நிலை இன்னும் சில இடங்களில் தொடர்வதுதான் மிகவும் வருத்தமாகவுள்ளது.
ராஜராஜ சோழன் குறித்து நான் கூறியது அனைத்தும் கே.கே.பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, பொ.வேலுசாமி மற்றும் நொபோரு கராஷிமா ஆகியவர்களின் புத்தகங்களிலிருந்து படித்தது. அத்துடன் ராஜராஜ சோழன் காலத்தில்தான் ஒவ்வொரு சாதிக்கு என்று தனியாக இடுகாடுகள் இருந்தது. இந்த முறை முந்தைய மன்னர்கள் காலத்தில் துவங்கினாலும், ராஜராஜ சோழன் காலத்தில்தான் இந்த முறை பெரிதும் கடைபிடிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.