சீர்காழி அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள 1000 ஏக்கர் முந்திரியை வாங்க ஆளில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலோர பகுதிகளான திருமுல்லைவாசல், வேட்டங்குடி, எடமணல், தொடுவாய், கூழையார், ஓலகொட்டாயமேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுனாமிக்கு பிறகு கடலோர நிலப்பகுதி உப்பு நீராக மாறியதால் இப்பகுதி விவசாயிகள் மாற்று பயிராக வறட்சியை தாங்கி வளரும் முந்திரி சாகுபடியை செய்து வருகின்றனர்.
தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் ஏப்ரல் ,மே மாதங்களில் முந்திரி பழங்கள் விற்பனை செய்யபடுவது வழக்கம். இதனால் நாள்தோறும் விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வந்தது. ஊரடங்கு உத்தரவால் முந்திரி பழம் விற்பனையும் பாதிக்கப்பட்டு பழங்கள் மரங்களிலேயே காய்ந்தும் வயல்களில் கொட்டியும் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதேபோல் கடந்த ஆண்டு 80 கிலோ முந்திரி 12 ஆயிரம் ரூபாய்கு விற்பனை ஆன நிலையில் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் தற்போது 8 ஆயிரம் ரூபாய்கு மட்டுமே விற்பனையாவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முந்திரி சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.