செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடி பொத்தையடியைச் சேர்ந்தவர் மீனா. இவர், அத்திப்பூக்கள் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் வள்ளியூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை வழக்கம் போல் பணிக்கு சென்ற மீனா, வள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என அனைத்தையும் மூன்றுசக்கர பேட்டரி வாகனத்தில் சேகரித்து வந்தார்.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வீட்டில் உள்ள குப்பைகளை சேர்த்து மனிதக் கழிவுகளையும் தூய்மைப் பணியாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பெண் தூய்மைப் பணியாளர், “மனிதக் கழிவுகளை ஏன் என்னிடம் தருகிறீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ராஜ்குமார், “நீதான் எடுத்துச் செல்ல வேண்டும்” எனக்கூறியதோடு ஒருமையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்பு தூய்மை பணியாளர் அங்கிருந்து சென்ற நிலையில், குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் சென்ற ராஜ்குமார், “மனிதக் கழிவுகளை நீதான் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று தகாத வார்த்தைகளால் திட்டி தூய்மை பணியாளர் வாகனம் மீது மனிதக் கழிவுகளை வீசி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடமும் மற்றும் வள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலரிடமும் மீனா புகார் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து வள்ளியூர் செயல் அலுவலர், காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வள்ளியூர் போலீசார், ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து தூய்மைப் பணியாளர் மீனாவிடம் கேட்டபோது.....
“அண்ணா நகர் பகுதியில் தினசரி பேட்டரி வண்டியில் குப்பைகளை சேகரித்து வருகிறேன். கடந்த வியாழக்கிழமை அந்த தெருவில் வசித்து வரும் ஒருவர் அசிங்கத்தை (மனிதக் கழிவை) கொண்டு வந்து குப்பை வண்டியில் போட வந்தார். அதை நான் தடுத்த போது என்னை திட்டினார்.
பின்பு அங்கிருந்து நான் கிளம்பி விட்டேன். அடுத்த தெருவில் குப்பை சேகரித்துக் கொண்டிருக்கும் போது நான் கொண்டு வந்த குப்பை சேகரிக்கும் வண்டியில் இருந்த வாளியில் அந்த மனிதக் கழிவுகளை போட்டு விட்டு சென்று விட்டார். இது குறித்து நான் உயர் அதிகாரியிடம் கூறினேன். அவர்கள் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்” என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் கூறியபோது....
“நாங்கள் அண்ணாநகர் பகுதியில் குடியிருந்து வருகிறோம். எனது பேரனுடைய கழிவை இலையில் எடுத்து வைத்து குப்பை தொட்டியில் வைத்திருந்தோம்.
அங்கு குப்பை சேகரிக்க வந்த தூய்மைப் பணியாளர் கழிவு இருப்பதை கண்டு எங்களிடம் கூறாமல் தெருவில் உள்ள மற்றவர்களிடம் கூறியது மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் நானும் அவரை திட்டினேன். பின்பு அந்த கழிவுகளை அங்கிருந்த டப்பாவில் தட்டி விட்டு வந்தேன். இந்த மாதிரியான கழிவுகளை குப்பையில் கொட்டக் கூடாது என எனக்கு தெரியாது. நான் செய்தது தவறுதான்” என்று கூறினார்.