“ ‘வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் நான்’ என்று கூறி மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூரை சேர்ந்த வினோத் பாபு என்பவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ராமநாதபுர ஏபிஜே மிசைல் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்கள் மாவட்ட SP-ஐ நேற்று சந்தித்து புகார் அளித்தனர். அதன்பேரில் அவர்மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஏபிஜே மிசைல் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனின் புகார் மனுவில், “பாகிஸ்தானில் நடந்த சர்வதேச போட்டியிலும் லண்டனில் நடந்த போட்டியிலும் கலந்துகொண்டு, இந்திய அணி சார்பில் தான் வெற்றி பெற்றிருப்பதாக கூறி மோசடி செய்த வினோத் பாபு என்ற நபர், தான் இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் கேப்டனென்றும் கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். வினோத் பாபுவால் எங்களைப் போன்ற உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட வினோத் பாபு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட ராமநாதபுரம் எஸ்பி தங்கதுரை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில், DCB குற்ற எண் 09/23 U/S 406,420 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட வினோத்பாபுவை தேடி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரியொருவர் நம்மிடையே கூறும்பொழுது, “மாற்றுத்திறனாளியான வினோத் பாபுவை இதுபோன்ற வழக்கில் கைது செய்ய சட்டத்தில் இடமில்லை. கொலை போன்ற பெரிய வழக்குகளில் மட்டுமே இவ்வாறானவர்களை கைது செய்ய முடியும். அதை தெரிந்துகொண்டுதான் அவர் இவ்வாறான மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.
தன் மாற்றுத்திறனை மோசடிக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என நாம் கருதலாம். இப்படியானவர்களின் செய்கைகளை தொடர்ச்சியாக நாம் அனுமதிக்க முடியாது. ஆகவே அவரை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.