கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, நிர்வாகிகளுடன் இணைந்து கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். பரப்புரைக்கான நேரம் முடிந்தவுடன் தனது காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது காரில் பயணித்தவாறு இரு கைகளை கூப்பியவாறு அண்ணாமலை சென்றுள்ளார். அப்போது அனுமதித்த நேரத்தை தாண்டி, இரவு 10 மணிக்கு மேல் பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி அண்ணாமலை சென்ற காரை ஒண்டிபுதூர் காவல்துறையினர் வழிமறித்துள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த அண்ணாமலை மற்றும் பாஜகவினர் காவல்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து அண்ணாமலை மற்றும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒண்டிபுதூர் வழியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலை, காவல்துறையின் மூலம் திமுகவின் அத்துமீறல் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கெல்லாம் ஏப்ரல் 19ஆம் தேதி கோவை மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.