வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி காவல்துறை தாக்கல் செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தி பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி மீது வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்ததாக வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் வசந்தி கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல், சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் வசந்தி செயல்படுவதாகவும், அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' என மதுரை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'காவல் ஆய்வாளர் வசந்தி நீதிமன்ற நிபந்தனைகளை மீறி, வழக்கின் எதிரிகளை சந்தித்து தனக்கு சாதகமாக செயல்படுமாறும், எதிரிகளை விசாரணை நீதிமன்றத்தில் சமாதானமாக போவதாகக் கூறி மனுத்தாக்கல் செய்ய வைத்துள்ளார்.
இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது நீதிமன்றத்தின் நிபந்தனையை மீறி சாட்சிகளை மிரட்டும் விதமாக உள்ளது. எனவே நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறியதாதக் கருதி வசந்தியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி மனு குறித்து காவல் ஆய்வாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்