திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள 'சுந்தரம் ஆர்கேட்' என்ற வணிக வளாகத்தில் மென்பொருள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அதன் பங்குதார்களான கார்த்திக், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர், தங்களது சொத்துக்களை கனரா வங்கியில் அடமான வைத்து நிறுவனத்திற்காக ₹22 கோடி கடன் பெற்றுள்ளனர்.
இதையடுத்து கடன் தொகையை முறையாக திருப்பி செலுத்தாத நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில், அடமான சொத்துக்களை கையகப்படுத்த திருச்சி மேற்கு துணை வட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த 18.10.2023 அன்று மதியம் சென்றுள்ளனர்.
அந்த குழுவில் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் குமார், வருவாய் அதிகாரி சரவணன், வங்கி ஊழியர் நிஷாந்த் உள்ளிட்டோர் இணைந்து அடமான சொத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அடமான சொத்தில் திருச்சி காஜாமலை லூர்துசாமி பிள்ளை தெருவில் உள்ள பங்குதாரர் கார்த்திக் வீட்டில் இருந்த பொருள்களை வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது, அங்கு தனது நண்பர்கள் 20 பேருடன் வந்த கார்த்திக், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
அதில் படுகாயம் அடைந்த துணை வட்டாட்சியர் பிரேம்குமார், வங்கி ஊழியர் நிஷாந்த் உள்ளிட்ட 5 பேர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவாய்த் துறையினர் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் மாவட்ட முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து துணை வட்டாட்சியர் பிரேம் குமார் கொடுத்த புகாரையும், அதன் பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தையும் திருச்சி கே.கே.நகர் காவல்நிலைய ஆய்வாளர் ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
திமுகவைச் சேர்ந்த திருச்சி மாமன்ற உறுப்பினரும், திமுகவின் பகுதி செயலாளருமான காஜாமலை விஜய், கார்த்திக், உள்ளிட்ட நபர்களது பெயர்கள் அந்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ளது. அவர்களை கைது செய்து குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டுமென வருவாய்த் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சுமார் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் இதுவரை காஜாமலை பகுதியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன பங்குதாரரான ரெங்கநாதன் (52), டிரைவர் அசேன் (42), கேபிள் ஆப்ரேட்டர் சையது ஜாகிர் உசேன் (29), சுப்பிரமணி (31), பெயிண்டர் ஷேக் மொய்தீன் (40), காட்டூர் பாரதி நகரை சேர்ந்த சென்ட்ரிங் பணியாளர் முத்துப்பாண்டி (30), காட்டூர் பாரி நகரை சேர்ந்த கொத்தனார் மாடசாமி (24), கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்த கூலி தொழிலாளி தேவ ஆசீர்வாதம் (34) உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, திருச்சி குற்றவியல் இரண்டாம் எண் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
வாக்குமூலத்தில் காஜாமலை விஜய் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் முதல் தகவல் அறிக்கையில் இதுவரை காஜாமலை விஜய் பெயர் பதிவு செய்யப்படவில்லை. இதில் முதல் குற்றவாளியாக கருதப்படும் கார்த்திக் நீதிமன்றத்தில் முன் பிணை பெற்று கைது செய்யப்படாமல் வெளியே உள்ளார்.