கோவை மாவட்டம் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவரை, நிர்வாக குறைபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடை நீக்கம் செய்து கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஜனவரி 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தன்னுடன் நியமிக்கப்பட்ட நான்கு வாழ்நாள் அறங்காவலர்கள், கடந்த 1999 – 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மரணமடைந்து விட்டதால், கண்ணன் என்பவரை தற்காலிக அறங்காவலராக நியமித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சித்ரா பவுர்ணமி விழா குறித்து விவாதிக்க நடந்த கூட்டத்தில் மற்ற உறுப்பினர்கள், கோவில் வரவு செலவு விவரங்களைக் கேட்ட போது, கண்ணன் அவர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டியதால், அவரை பதவியில் இருந்து நீக்கியதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பழிவாங்கும் வகையில், எந்த ஆதாரங்களும் இல்லாமல் தனக்கும், பிற அறங்காவலர்களுக்கும் எதிராக கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், தன்னை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்காமல் பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி P.D. ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, இந்து சமய அறநிலையத்துறை முழுமையான ஆராயாமல், மனதைச் செலுத்தாமல் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்து அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், அறங்காவலர்கள் இறந்ததை தெரிவிக்கவில்லை என்றும், நன்கொடை சீட்டுகள் அடித்ததில் அனுமதி பெறவில்லை என்றும் வாதிட்டார். இருதரப்பு வாகனங்களைக் கேட்ட நீதிபதி, மனுதாரர் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விளக்கத்தை ஆய்வு செய்ய வேண்டும் என இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டார்.
மனுதாரருக்கு எதிராக எந்த ஒரு பாதகமான நடவடிக்கைகளையும் நீதிமன்ற உத்தரவின்றி எடுக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 28ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.