வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில், நிலத்தின் உரிமையாளரான தேனி எம்பி ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, திமுக மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் மாவட்ட வன அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், ரவீந்திரநாத் எம்பி மீது வழக்குப்பதிவு செய்ய மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட வனத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகே சொர்க்கம் கோம்பை என்ற வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் கடந்த 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கி உயிரிழந்தது. வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையை மீட்டெடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனை செய்து சிறுத்தை எரிக்கப்பட்டதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறுத்தை வேலியில் சிக்கி உயிரிழந்த இடம், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம். அந்த தோட்டத்திற்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க தனது தோட்டத்தை சுற்றி அமைத்திருந்த அந்த வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளது.
சிறுத்தை உயிர் இழந்த சம்பவத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து வனத்துறையினர் கைது செய்தனர். தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்களான தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தோட்ட உரிமையாளரான தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் வழக்குப் பதிவு செய்யக்கோரி, தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் திமுக ஒன்றிய குழு தலைவர் எல்லாம் பாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் தேனி மாவட்ட வன அதிகாரி சமரதாவை சந்தித்து புகார் மனு அளித்தனர். புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வன அலுவலர் சமர்தா, இந்த வழக்கில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்வதற்காக, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறும் போது, ”சமீபத்தில் பெரியகுளம் அருகே சிறுத்தை ரத்த காயங்களோடு இருந்துள்ளது. சிறுத்தை மின்சாரம் தாக்கி இறந்ததா? அடித்துக் கொன்றார்களா? என்று தெரியவில்லை. சிறுத்தை இறந்த தோட்டத்தின் உரிமையாளர் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மீது இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. பயத்தில் வழக்குப் பதிவு செய்யவில்லையா என்று தெரியவில்லை. இதனால் மாவட்ட வன அதிகாரியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளோம்.
அடித்துக் கொன்றார்களா என்று விசாரிக்க கேட்டுள்ளோம். சிறுத்தை இறந்ததாக கூறப்படும் தோட்டத்தின் உரிமையாளர் மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் இருவர் என வருவாய்த் துறையினரிடம் விவரம் பெற்றுள்ளோம். தோட்ட உரிமையாளர் மக்களவை உறுப்பினராக உள்ளதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என மாவட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறுத்தை இறப்பில் உள்ள மர்மங்களை கண்டுபிடித்து வனவிலங்குகளை பாதுகாப்பதே எங்கள் நோக்கம். இதில் அரசியல் இல்லை. இந்த சிறுத்தை இறப்பை சாதாரணமாக விட்டு விட்டால் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து சிறுத்தைகள் இறக்க கூடும்” என்றார்.