மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்று கைது செய்யப்பட்ட வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட 600 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த பல்வேறு இயக்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. மெரினா கடற்கரை பொழுதுபோக்கு இடம் என்பதால், அங்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் தடையை மீறி மெரினா அருகே உள்ள சாலைகளில் திரண்டனர்.
இலங்கை அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கைதும் செய்தனர். பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு மெழுகுவத்தி ஏந்தி நினைவேந்தல் நடத்திய அவர்கள், இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் விடுவித்தனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியது, உத்தரவை மதிக்காதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.