வேலூர் “மார்க்” முதலீடு நிறுவனம் மீதான வழக்கு! நீதிமன்றத்தில் காவல்துறை கொடுத்த விளக்கம்

வேலூர் “மார்க்” முதலீடு நிறுவனம் மீதான வழக்கு! நீதிமன்றத்தில் காவல்துறை கொடுத்த விளக்கம்
வேலூர் “மார்க்” முதலீடு நிறுவனம் மீதான வழக்கு! நீதிமன்றத்தில் காவல்துறை கொடுத்த விளக்கம்
Published on

வேலூரை சேர்ந்த மார்க் என்கிற பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிரான புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமது நண்பர்கள் மூலம் மோகன்பாபு விஜயன் என்பவருடன் தனக்கு அறிமுகம் ஏற்பட்டதாகவும், அவரும், ஜனார்த்தனன் சுந்தரம், வேதநாராயணன் சுந்தரம், லக்‌ஷ்மி நாராயணன் சுந்தரம் ஆகியோரும் வேலூரில் பங்குச்சந்தை முதலீட்டு தொழில் செய்யும் "மார்க்" (MARC) என்ற நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருப்பதாக கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 26 சதவீதத்திற்கு மேலும், மாதத்திற்கு 2 சதவீதமும் லாபம் தருவதாகவும் உறுதியளித்ததாக கூறியுதை நம்பி தானும் இரண்டரை லட்சம் முதலீடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். உறுதி அளிக்கப்பட்டது போல மே மாதம் வரை பணம் திருப்பி கிடைத்த நிலையில், ஜூன் மாதம் முதல் பணம் வரவில்லை என்றும், இதுதொடர்பாக கேட்டபோது, அலுவலத்தில் தணிக்கை நடைமுறை சார்ந்த சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக கூறியதாகவும், மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தப்போது அவர்கள் தலைமறைவாகிவிட்டது தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மார்க் நிறுவனத்திற்கு எதிராக கார்த்திக் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் மார்க் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்காணிக்கவும், உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com