டிஜிபி பணி நீட்டிப்பை எதிர்த்து வழக்கு: தலைமைச் செயலர் உட்பட சிலருக்கு நோட்டீஸ்

டிஜிபி பணி நீட்டிப்பை எதிர்த்து வழக்கு: தலைமைச் செயலர் உட்பட சிலருக்கு நோட்டீஸ்
டிஜிபி பணி நீட்டிப்பை எதிர்த்து வழக்கு: தலைமைச் செயலர் உட்பட சிலருக்கு நோட்டீஸ்
Published on

டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை சட்ட விரோதம் என அறிவிக்ககோரிய வழக்கில், தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்ற வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.கே.ராஜேந்திரன் மீதான லஞ்ச புகார் குறித்த வருமான வரித்துறையின் கடிதம், கோப்புகளை ஆராய்ந்த போது கிடைக்கவில்லை என தமிழக தலைமை செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு மறைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் 2017 நவம்பரில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், சசிகலாவின் அறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. எனவே ராஜேந்திரனின் நலன் கருதியே, அந்த ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பு நியமனத்தை சட்டவிரோதம் என அறிவித்து உத்தரவிட வேண்டும், குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐயின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது. தமிழ்நாடு காவலர் சட்ட விதிப்படி புதிதாக டிஜிபியை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கேட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக தலைமை செயலர், டிஜிபி, வருமான வரித்துறை தலைமை ஆணையர், சிபிஐ இயக்குநர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், டிகே.ராஜேந்திரன், சசிகலா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் சசிகலா எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com