செய்தியாளர்: சுதீஸ்
கோவைக்கு மார்ச் 18 அன்று வருகை தந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் சின்மயா மெட்ரிக் பள்ளி, வடவள்ளி சின்மயா சிபிஎஸ்இ பள்ளி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 22 பேர் பங்கேற்க அழைத்து வரப்பட்டனர்.
இந்துக் கடவுள்கள் போல உடையணிந்து, கட்சி சின்னங்கள் மற்றும் காவி நிறத் துணிகளை அணிவித்து ரோடு ஷோ நிகழ்வில் மாணவிகள் பங்கேற்க வைக்கப்பட்டனர். இது குறித்து புகார் எழுந்ததை அடுத்து கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வைப்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்பதால், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் 3 பள்ளிகள் மீதும் தனித் தனியாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மூன்று தனியார் பள்ளிகள் மீதும் குழந்தைகள் நலச் சட்டம் பிரிவு 75-ன் கீழ் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.