செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை எம்எம்சி காலனி காவேரிநகர் பகுதியை சேர்ந்தவர் தெய்வேந்திரன், இவர் தெற்குவாசல் பகுதியில் மர சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தெய்வேந்திரனுக்கு அப்பகுதியை சேர்ந்த சிலம்பம் மற்றும் யோகாகலை கற்றுத்தரும் கலைச்செல்வி என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
கலைச்செல்வி தெய்வேந்திரனிடம் “இரிடியம் கலந்த கலசத்தில் சில லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும்” என ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் தெய்வேந்திரனை நம்ப வைக்க திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக மாவட்ட கழக பிரதிநிதி பொறுப்பில் இருக்கும் முகமது ரபி என்பவருடன் செல்போனில் கலைச்செல்வி பேச வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மதுரைக்கு முகமது ரபி வந்தபோது அவரை சந்தித்த தெய்வேந்திரன் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார். மேலும், “இது 2000 கோடி ரூபாய் வியாபாரம். இதில் பலரை சேர்த்துள்ளேன். மேலும் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுங்கள்” என முகமது ரபி பேசி உள்ளார்.
இதையடுத்து சென்னையில் இரிடிய மீட்டிங் எனக் கூறி சென்னைக்கு அழைத்துச் வந்துள்ளனர். சென்னையில் விடுதியொன்றில் தங்கவைத்து தெய்வேந்திரனிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தங்கும் விடுதியில் நடைபெற்ற மீட்டிங்கில் பல மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட ஏராளமான அதிகாரிகள், பணக்காரர்கள், வழக்கறிஞர்கள் என முக்கிய புள்ளிகள் வந்துள்ளனர்.
அப்போது பேசிய முகமது ரபி, “சில நாட்களில் ஒவ்வொருவராக மும்பைக்கு சென்று அங்கு ஒருவர் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து தெய்வேந்திரனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கலைச்செல்வி, 20 கோடி ரூபாய் பணம் தயாராக உள்ளதால், நீங்கள் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், உடனடியாக 5 லட்சம் ரொக்க பணத்தை தெய்வேந்திரன் கொடுத்துள்ளார்.
அதற்குப்பிறகுதான் அவர்களின் சுயரூபம் வெளிவந்துள்ளது. பணம் தொடர்பாக தெய்வேந்திரன் மீண்டும் அவர்களை அழைத்தபோது, அவர்கள் கேட்ட பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர். மும்பையில் பணம் கொடுப்பவருக்கு பிரச்னை எனக் கூறிய கலைச்செல்வி, “தெய்வேந்திரனிடம் புலித்தோல், சிறுத்தை நகம், வைரக்கல் உள்ளது; அதனை விற்றால் பணம் கிடைக்கும்” என மேலும் பணம் கேட்டுள்ளார்.
அச்சமயத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தெய்வேந்திரன் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் மோசடி குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முகமது ரபி, கலைச்செல்வி ஆகிய இருவர் மீதும் தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.