முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களின் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதியை முடக்கி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களை வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கு ஒதுக்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் தொடர்புடைய நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட வைப்பு நிதி ஆவணங்கள் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்தனர்.
அதனடிப்படையில், 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு கே.சி.பி. இன்ப்ரா நிறுவனத்தின் 109 கோடி ரூபாய் மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனத்தின் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் என 110 கோடியே 80 லட்ச ரூபாய்க்கான நிரந்தர வைப்பு நிதி செலுத்தி இருப்பதாக, தெரியவந்திருப்பதால் அவற்றை முடக்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், கே.சி.பி. இன்ப்ரா மற்றும் ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனங்கள் வங்கிகளில் செலுத்தியுள்ள 110 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதிகளை முடக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.