சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை மறுக்கப்பட்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கினை கீழமை நீதிமன்றம் 3 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் விசாரணை நடைபெற்று முடியும் வரை கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தற்போதைய சூழலில், கீழமை நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரிப்பதால் எந்த பாதகமான சூழலும் ஏற்பட்டும் விடப்போவதில்லை என கூறியதோடு வழக்கினை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டனர்.