ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அதன் நிறுவனர்களாக இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவை கைது செய்யக்கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான கண்ணன் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “ரவுடிகளை ஒடுக்க தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருப்பது பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் நடிகர் அஜித்தின் 62ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் அவரது ரவுடி பிக்சர்ஸ் குழு இணைந்து பட்டாசு வெடித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இப்படியாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த வகையில் உடனடியாக ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்து, நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.