ஊராட்சிமன்ற பெண் தலைவரை அவதூறாகவும், ஜாதி பெயரை குறிப்பிட்டும் பேசிய துணை தலைவர், அவரது கணவர் உட்பட 3 பேர் மீது படியலின வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சிமன்ற தலைவியாக இருப்பவர் செல்வி. துணை தலைவியாக இருப்பவர் ஷகிலா. இந்நிலையில் துணை தலைவர் ஷகிலா மற்றும் அவரது கணவர் ரவி, தன்னை பணிசெய்ய விடாமல் தடுப்பதுடன், ஜாதி பெயரைக் கூறி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர் என பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ‘’என்னை நாற்காலியில் உட்காரக் கூடாது, கீழே தரையில்தான் உட்கார வேண்டும் என இழிவுபடுத்தி பேசுவதோடு மிரட்டல் விடுக்கிறார். கடந்த 8 மாத காலமாக ஊராட்சியில் செயல்படுத்தும் திட்ட பணிகளுக்கு கையெழுத்திடாமல் அவரது மனைவி ஷகிலாவும் புறக்கணிக்கிறார். இதனால் ஊராட்சிப் பணிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. சாதி பெயரை கூறி என்னை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் துணை தலைவி மற்றும் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் பாதிக்கப்பட்ட கணியம்பாடி ஊராட்சிமன்ற தலைவி செல்வியிடம் புகாரை பெற்ற வேலூர் தாலுக்கா காவல் துறையினர், ஊராட்சி மன்ற துணை தலைவரான ஷகிலா, அவரது கணவர் ரவி மற்றும் வெங்கடேஷன் ஆகிய 3 நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டுதல் உட்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.