அடுக்குமாடி குடியிருப்புக்கு பட்டா வழங்காத விவகாரம் தொடர்பாக திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் இன்று குடியிருப்பு வாசிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இந்த போராட்டத்திற்கான காரணம் என்ன? போராட்டத்தில ஈடுபட்டுள்ள குடியிருப்பு வாசிகள் சொல்வதை விரிவாக பார்க்கலாம்...
”கடந்த 2018 முதல் என்னோட இஎம்ஐ தொகையை கட்டி வருகிறேன். 25 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த புரோஜக்டை வாங்கியிருக்கேன். ஆனா, இன்றைக்கு வரைக்கும் என்பெயரில் பத்திரப்பதிவு ஆகல. வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்து கொடுக்க முடியாது என்பது கடந்த 2019ஆம் ஆண்டே காசா கிராண்ட் நிறுவனத்துக்குத் தெரியும். தெருஞ்சதுக்கு அப்புறம் கூட நிறைய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.
450 வாடிக்கையாளர்கள் இருக்காங்க. அவங்க எல்லாத்துக்குமே இதே பிரச்னைதான். சில பிளாக்குக்கு மட்டும் பதிவு நடந்திருக்கு அதுவும் வேலிட் இல்லன்னு சொல்லிட்டாங்க. அதுவும் பேக் பதிவு போலதான் இருக்கு. அவங்க பெயரில் வீடு இருக்கிறது என்பதெல்லாம் உண்மை கிடையாது. நாங்க இஎம்ஐ கட்றோம். வாடகை வீட்லேயும் இருக்கோம். ஒவ்வொரு முறையும் மக்களை அழைத்து வருகிறோம். ஆனால் ஒருமுறை கூட எம்டி எங்களை சந்திக்கவில்லை.
நாங்கள் எம்டி-யை சந்திக்க வேண்டும். அது ஒன்றுதான் எங்களோட கோரிக்கை, ஏனென்றால் அவரிடம்தான் எங்களுக்கான தீர்வை கேட்க முடியும், நாங்க அவர்கிட்டதான் பணத்தை கொடுத்திருக்கோம். எனக்குத் தேவை என்னோட பணத்தை திருப்பிக் கொடுத்திருங்க. எனக்கு வேற எதுவுமே வேண்டாம். என்னோட காச எனக்கு கொடுத்திருங்க பெரிய கும்பிடா போட்டுட்டு போயிடுறேன்” என்றார் பாதிக்கப்பட்ட பெண்.
30 லட்சம் முதல் 50 லட்சம் வரை கொடுத்து பிளாட் வாங்கியவர்கள் குடியேறி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னும் அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இவர்கள் வாங்கிய நிலம் அநாதீன நிலமாக இருப்பதால் வீட்டு வரியை கூட வசூலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 350 பேருக்கு பட்டா வழங்கப்பட வேண்டிய நிலையில், 40 முதல் 50 கோடி வரை பணம் தர வேண்டியுள்ளது. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று நம்பலாம்.