கொடைக்கானலில் கேரட் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் அதிகளவு கேரட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் விவயாயிகளுக்கு பொருளாதாரத்தை கொடுக்கும் பயிராக கேரட் உள்ளது. ஆகவே இப்பயிரை பலரும் விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டின் கடைசிக் கட்ட அறுவடை நேரத்தில், இதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
உயர் வீர்ய ரக விளைச்சல் அடைந்த கேரட் கிலோ 10 ரூபாய்க்கும், சிறிய அளவில் விளைந்துள்ள கேரட் கிலோ 5 ரூபாய் எனக் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் கடும் நட்டத்தை சந்தித்து வருகின்றனர் எனப் புகாஎ எழுந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை அளவிற்கு அதிகமாக பெய்ததால், கேரட் செடிகள் அழுகி வெள்ளாமை பாதித்து விட்டதாக மேல்மலை விவசாயிகள் கூறுகின்றனர்.
வருடா வருடம் இதுபோல விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் நட்டமடைவதை தவிர்க்க, அரசு கேரட் கொள்முதல் மையங்களை ஏற்படுத்தி, கேரட் ஜாம், கேரட் பதப்படுத்த கிடங்கு அமைத்து தர மலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தோட்டக்கலைதுறை இணை இயக்குனர் நாராயணனிடம் கேட்டதற்கு, காய்கறி பதப்படுத்துதல் கிடங்கு அமைக்க முயற்சித்து வருவதாகவும், மதிப்பு கூட்டும் திட்டம் வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்