பூந்தமல்லி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதிய கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் கிருத்திகா (23), இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை ஒருநாள் சுற்றுலா செல்ல தனது நண்பர்களை அழைப்பதற்காக பூந்தமல்லி நோக்கி கிருத்திகா தனது காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியின் மீது மோதி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கிருத்திகா அலறியதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காரின் கதவை திறந்து கிருத்திகாவை மீட்டனர்
இதையடுத்து கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கண்டெய்னரின் ஒரு பகுதியும், டயரும் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் தீயில் எரிந்து எலும்புக் கூடானது.
இந்நிலையில், கண்டெய்னரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கிருத்திகாவிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமாக கண்டெய்னரை திறந்து பார்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கண்டெய்னர் மீது மோதி கார் பிடித்து எரிந்த சம்பவத்தில் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.