செய்தியாளர் - விக்டர் சுரேஷ்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா. இவர் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் 4 பெண் பயணிகளை (பிரியா, ஜோதி, சியாமளா, மூதாட்டி ராணி) ஏற்றிக்கொண்டு ஆசிரியர் நகர் வழியாக அடியத்தூர் பகுதிக்கு செல்ல மேம்பாலம் மீது ஏறியுள்ளார்.
அப்போது அவருக்கு எதிரே காரை தாறுமாறாக ஓட்டி வந்த அதேபகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் காரை மோதியிருக்கிறார். இதில் ஆட்டோவில் பயணித்த மூதாட்டி ராணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் ஆட்டோவில் இருந்த பிரியா மற்றும் ஜோதி என்ற இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து ஏற்பட்டபோது ஆட்டோ ஓட்டுநர் ராஜா மற்றும் சியாமளா என்கிற பெண் பயணி மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி எறியப்பட்டனர். அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஆட்டோ ஓட்டுநர் ராஜா மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கும், கை முறிந்த நிலையில் பிரியா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சியாமளா தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
காரின் உரிமையாளர் சரவணன் தப்பி ஓடிய நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சியும் அதிலிருந்து இருவர் தூக்கி எறியப்பட்டு மேம்பாலத்திற்கு கீழே வந்து விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.