மதுரை மாவட்டம் மேலூர் சூரக்குண்டு நான்கு வழிச்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் அதுபற்றி இங்கு போதிய எச்சரிக்கை பதாகைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிட்டு வந்தன.
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து ஹானஸ்ட் ராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ராஜபாளையம் நோக்கி சென்ற கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சூரக்குண்டு நான்கு வழிச்சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த ஹானஸ்ட் ராஜின் மனைவி பவானி மற்றும் ஓட்டுநர் பாலாஜி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். பவானியின் 10 மாத குழந்தை மற்றும் ஹானஸ்ட்ராஜ், அவரது அம்மா உள்ளிட்ட மூவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடிக்கடி இது போன்று நிகழும் விபத்துகளை தடுக்க அந்த இடத்தில் உரிய பதாகைகள் வைக்கவேண்டும், மேலும் தேவையான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.