நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்க சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது...
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து..
பாஜகவை தமிழக மக்கள் புறக்கணிக்க துவங்கி விட்டனர். காங்கிரஸ் - திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. இதனால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும். காங்கிரஸ், பாஜக மட்டுமே தேசிய கட்சி.
காங்கிரஸ் கூட்டணியில் உருவாகும் ஆட்சியே உண்மையான ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியும். கமலஹாசன் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து..
விஜய் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை வெளிபடுத்த வேண்டும். சினிமா ரசிகர்கள் கூட்டத்தை மட்டுமே வைத்து அரசியல் கட்சியை நடத்தி விட முடியாது. வாக்கிற்கு பணம் வாங்கக் கூடாது என்ற நடிகர் விஜய்யின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
பூரண மதுவிலக்கு குறித்து..
பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்பது சாத்தியமில்லாதது. மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து மக்களின் உயிரிழப்பு மேலும் அதிகமாகும்.
அமலாக்கத்துறை சோதனை குறித்து..
அதே போல் பாஜகவுக்கு எதிராக செயல்படக் கூடிய அரசியல்வாதிகளை ஒடுக்கும் வகையில் மட்டுமே அமலாக்கத் துறையை பயன்படுத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை என்ற அமைப்பே இருக்கக் கூடாது” என தெரிவித்தார்.