ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா சார்பில் தனித்தனியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்ததுடன், இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு சரியே என்றும் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தலைமை தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணிக்கு வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளபட்டது. மேலும் இடைக்காலமாக குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. அத்துடன் குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்தது.