மே 1ல் ஊரடங்கு அவசியமில்லை என்றும் மே 2ல் வழக்கம் போல் ஞாயிறு பொது ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் என்பதால், அன்றைய தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பான்மையான மக்கள் அன்றையதினம் வெளியே வரவாய்ப்பில்லை. இது மட்டுமன்றி அன்றைய தினம் 18 +க்கு மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போடுவதால் முழு ஊரடங்கு தேவையில்லை” என கூறினார்.
மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் அன்று வாக்குமையத்திற்கு வரும் நபர்களுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய வழிகாட்டுதல்களின் படி அனுமதிக்கப்படுவர். ஆகையால் ஊரடங்கு குறித்த முடிவை கள நிலவரமே முடிவு செய்யும் என்றார். ஆகையால் இது குறித்த முடிவை இரண்டு மாநில அரசுகளும் நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மே 2 ஊரடங்கு நாளில் வேட்பாளர்கள் முகவர்களுக்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை எனவும் அதன் பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக, கொரோனா பரவலை தடுக்க மே 1, 2 ஆகிய தேதிகளில் ஊரடங்கு விதிக்க முடியுமா என தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.