ஈரோடு சிறுவன் அன்பரசுக்கு தடுப்பூசி போட்டதால் புற்றுநோய் கட்டி ஏற்படவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன், சுசீலா தம்பதியினரின் மகனான அன்பரசுக்கு அங்கன்வாடி மையத்தில் அம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சில நாட்கள் கழித்து ரத்தக்கட்டு உருவாகியுள்ளது. சிறிதாக இருந்த கட்டி நாளடைவில் வளர்ந்து புற்று நோய் கட்டியாக மாறிவிட்டது. இது தொடர்பாக நாளிதல் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் கொண்ட அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் இது தொடர்பாக சுகாதார துறைச் செயலாளர் 27ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு சிறுவன் அன்பரசுக்கு தடுப்பூசி போட்டதால் புற்றுநோய்க் கட்டி ஏற்படவில்லை என விளக்கமளித்துள்ளது.