உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 500 பேர் பங்கேற்ற இந்நிகழ்வில் நடிகை கவுதமியும் பங்கேற்றார்.
பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் தொடங்கிய இந்த வாக்கத்தான் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் ஆல்காட் பள்ளியிலேயே முடிந்தது. இதனை அடுத்து செய்தியார்களை சந்தித்த கவுதமி புற்றுநோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டதாக கருதக்கூடாது எனக் கூறினார். உரிய நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்தால் புற்றுநோயிலிருந்து மீளலாம் எனவும் அவர் கூறினார். அதற்கு வாழும் சாட்சியாக தானே இருப்பதாகவும், இது போன்ற உதாரணமாக பலர் இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.