தமிழகத்தில் பணப்பட்டுவாடா புகாரால் 2 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய பின்பும் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த முடியவில்லை என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1-ஆம் தேதியோடு தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் ஓம் பிரகாஷ் ராவத். இவர் தனது பணிக்காலத்தில் சந்தித்த சவாலான விஷயங்களை பகிர்ந்துள்ளார். மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் நடைபெறும் பணப்பட்டுவாடா மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளே தேர்தல் ஆணையம் முன் சவாலான பணிகளாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ தமிழகத்தில் 2 தொகுதிகளில் அதிகப்படியான பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அந்த இரண்டு தொகுதிகளிலும் சட்டவிதி 324-ஐ பயன்படுத்தி தேர்தலை ரத்து செய்தோம். தேர்தலை ரத்து செய்த பின்பும் கூட பண துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. பண துஷ்பிரயோகம் மற்றும் போலி செய்திகள் பரவுவது இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நடைபெறுகிறது. உலக அளவில் அனைத்து தேர்தல் அமைப்புகளும் இப்பிரச்னையை எதிர்கொண்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகள் மூலம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மக்களின் மனநிலையும் மாறிவிடும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் வாக்குப்பதிவு நாளன்று, எந்த அதிகாரியும் வருவதில்லை.. பிரச்னைகளை கேட்பதில்லை என தொடர்ச்சியாக புகார் கூறுகிறார்கள். தற்போது இந்திய அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன்கள் கையிலும் அதிகாரம் உள்ளது. வாக்குச்சாவடியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதனை புகைப்படமாகவோ, வீடியோகவோ எடுத்து சி-விஜில் ஆப்பில் பதவிடலாம். அது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சென்றுவிடும். அதன்மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஓம் பிரகாஷ் ராவத் குறிப்பிட்டார்.
ஆளும் அரசிற்கு எது வேண்டுமோ அதனை தான் தேர்தல் ஆணையம் செய்வதாக சொல்வது அடிப்படை ஆதாரமற்ற புகார் ஆகும். சமீபத்தில் தேர்தல் அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை 3 மணி நேரம் தள்ளி வைத்தோம். தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதாவது கடுமையான புயல் முன்னறிவிப்பு காரணமாக இரண்டு தொகுதி இடைத்தேர்தலை இப்போது அறிவிக்க வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பு 3 மணி நேரம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் இது தவறாக சித்ததரிக்கப்பட்டு விட்டது. தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் பேரணிக்கு ஆதரவாக செயல்படுவதை போன்று அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். 40 ஆண்டுகால கெரியரில் எந்தவொரு இடத்திலும் அரசியல் சார்ந்த அழுத்தங்களை சந்திக்கவில்லை எனவும் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
Courtesy: The News Minute