"அஞ்சு வருஷம் படிச்சா ராஜாபோல வாழலாம்; இல்லனா 50 வருஷத்துக்கு அம்போனுதான் போகணும்" என அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை எச்சரித்த இன்ஸ்பெக்டர் அறிவுரை கூறினார்.
பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தின் மேற்கூரை மற்றும் படியில் தொங்கியபடி பயணம் செய்துவரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கண்டிக்கும் போலீசார், மாணவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லியில் அரசுப் பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்களை அங்கு பணியில் இருந்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், மாணவர்களை உள்ளே சென்று பயணிக்குமாறு எச்சரிக்கை செய்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்த '5 ஆண்டுகளுக்கு ஒழுங்காக படித்தால் ராஜாபோல வாழலாம். இல்லையென்றால் அடுத்த 50 ஆண்டுக்கு அம்போனுதான் போக வேண்டும்' என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். இதைத்தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் ஒருவித சிகை அலங்காரத்துடன் வந்தனர்.
அவர்களை நிறுத்தி அவர், அறிவுரை கூறியதோடு காதுகளில் அணிந்திருந்த கம்மலை கழற்றச் சொன்னார். பின்னர், தலைமுடியை ஒழுங்காக வெட்ட வேண்டும் என்றும் எச்சரித்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.