பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியதோடு, பிற மாநிலங்களை விட குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மதுபான விற்பனை செய்வதை தடுக்க கோரிய 2 வழக்குகள் குறித்து பேசிய நீதிபதிகள், பள்ளி மாணவர்களின் கைகளுக்கு மதுசெல்லாமல் இருக்க, மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.
மாணவர்கள் கைகளுக்கு மதுபானம் செல்ல தடை
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும், மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் தமிழகமே முன்னிலை
இந்த வழக்குகள் மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "தென் பகுதியின் 4 மாநிலங்களில் தமிழகத்தில் தான் குறைவான நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள், குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் விற்பனையில் தமிழகமே பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என தெரிவித்தனர். அதற்கு அரசுத்தரப்பில், "தமிழகத்தில் மதுவின் அளவு குறைவாகவும், விலை அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவே காரணம்"என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பேசிய நீதிபதிகள், "மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது?" என கேள்வி எழுப்பினர். அரசுத்தரப்பில், "கொரோனா கால கட்டத்திலேயே, பிற மாநிலங்களிலிருந்து மது வாங்கி வருவது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெற்றதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. மதுப்பிரியர்கள் மாற்றுவழியையே யோசிக்கின்றனர்.
21 வயதிற்கு கீழானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு மதுவிற்பனை செய்வதில்லை என உறுதியாக சொல்ல முடியுமா?
அப்போது, "பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா?" என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில், "அரசு இந்த விசயத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.
நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
விவாதங்களுக்கு பிறகு பேசிய நீதிபதிகள், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும், எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் இது தொடர்பாக அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.