மதுரை, தேனி, காரைக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், மற்றும் திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தர விரிவுரையாளர், கவுரவ விரிவுரையாளர்கள் பதவிகளை இந்திய பார் கவுன்சில் சட்டக் கல்வி விதிகளின்படி நிரப்ப உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு, தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை, அரசு சட்டக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாத நிலையில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் தமிழகத்தில் மூடிவிடலாமே என கூறினர். புதிய சட்ட கல்லூரிகளை திறந்தால் போதுமா? புதிய அரசு சட்டக் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் தேவையான பேராசிரியர்களை நியமிக்க வேண்டாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் மொத்தம் எத்தனை சட்டக் கல்லூரிகள் உள்ளன? அதில் எத்தனை விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர்? எத்தனை மாணவர்கள் பயில்கின்றனர்? அரசு சட்டக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் மாணவர்கள் - பேராசிரியர்கள் விகிதம் என்ன? சட்டக் கல்லூரிகளில் எத்தனை ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? அவற்றில் எத்தனை காலியாக உள்ளது? என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர்.
அரசு சட்டக் கல்லூரிகளில் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.