தமிழ்நாட்டில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் பட்டியலின மக்கள் ஆதரவளித்தால் பாமக சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆக்கப்படுவார் என்று அன்புமணி கூறியிருப்பதும் தமிழக அரசியலில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
“பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு” என்கிற தலைப்பில், பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விசிக சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கடந்த 13-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “உத்தர பிரதேசத்தில் முன்பு மாயாவதி முதல்வராக இருந்தார். அதன் பிறகு, இந்தியாவில் எந்தச் சூழலிலும், எந்த காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், ஏன் நாடாளுமன்றத்துடன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். நமக்கு தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இருப்பது சரி. ஆனால், தி.மு.க. அரசு என்பது நிலையானது அல்ல. மாநில அரசு தான் நிலையானது. கட்சிகள் வரும் போகும். அது வேறு. சமூக நீதி மீது நம்பிக்கையுள்ளவர்கள் வருவார்கள், போவார்கள். அது வேறு. மாநில அரசுகளில் எந்த சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் நிலை இங்கே இல்லை, வர முடியாது” எனப் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமாவளவன் கருத்தை ஏற்பதாகவும், திமுக அரசின் மீது நம்பிக்கை உள்ளது எனக் கூறும் கருத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “திருமாவளன் சொல்லியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. 2026ல் அதிகமான சீட் கொடுப்பார்களா என முயற்சி செய்கிறார். என்னைப் பொருத்தவரை தலித் சமுதாயம் அரசியலில் மேலே வரவேண்டும்” என தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாமக தலைவர் அன்புமணி, “தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பட்டியலின சமுதாயம் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் நாங்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்குவோம். இது வெறும் பேச்சு அல்ல, எங்களுக்கு முதன்முதலில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்ததும் அதை தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தலித் ஏழுமலைக்கு கொடுத்தோம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் முதலமைச்சராக மாயாஜாலங்கள் தேவையில்லை என்றும் விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தாலே போதுமானது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், “பட்டியலினத்தவர் முதலமைச்சராக போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. வன்னியரும், பட்டியலினத்தவரும் இணைந்தால் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். இரு சமூகத்தினரின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போது நமக்கு வேண்டியது, பாமக பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்க முயன்றாலும், கட்சியின் கீழ்மட்ட தொண்டர்கள் இருதரப்பிலும் ஒன்று சேர்வார்களா என்பதுதான். இது தொடர்பாக பெருஞ்செய்தியில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி, திருமாவளவன் முதலமைச்சர் வேட்பாளர் என ராமதாஸ் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, “பாமகவின் வாக்கு சதவீதத்தை தக்கவைப்பதற்கு எந்த விஷயங்கள் எல்லாம் பயன்பட்டதோ, அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் வெற்றிக்கு குறுக்கே நிற்கிறது. பாமகவிற்கு எதிராக யார் நிற்கிறார்களோ அவர்கள் பின்னால் அட்டவணைப் பிரிவு மக்கள் சென்றுவிடுகிறார்கள். எனவே மக்கள் மத்தியில் இருக்கும் தங்களுக்கான எதிர்ப்பை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக இருக்கிறது.
அன்புமணி முதல்வர் என சொன்ன தேர்தல்களில் 5% வாக்குகளைப் பெற்று அரசியல் சக்தியாக அவர்களை நிலைநிறுத்திவிட்டார்கள். அது சாதனைதான். ஆனால் அது வெற்றியைக் கொடுக்கவில்லை. வெற்றி வேண்டுமானால் பட்டியலின மக்களுடனான நல்லிணக்கம் அவர்களுக்கு வேண்டும்.
அன்புமணியின் இந்த கருத்து எப்படி வெற்றியை தேடிக் கொடுக்கும் என்றால், திருமாவளவன் முதலமைச்சர் வேட்பாளர் என அன்புமணி சொல்ல வேண்டும். விசிக இல்லாமல் திருமாவளவன் இல்லாமல் பாமக இப்படிச் சொல்வது வெறும் வார்த்தைதான்” என தெரிவித்தார்.