புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு அரசு துறைகளில் ரூ. 28.05 கோடிக்கான அரசு பணம் முறைகேடு மற்றும் பண கையாடல்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 2020-21ம் நிதியாண்டில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் அறிக்கை பேரவையில் சமர்பிக்கப்பட்டது. அதில் முக்கிய அம்சமாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டை விட ரூ. 891 கோடி குறைந்துள்ளதாகவும், மேலும் பல்வேறு அரசு துறைகளில் 321 பணிகளில் ரூ. 28.05 கோடிக்கான அரசு பணம் முறைகேடு, இழப்பு, திருட்டு மற்றும் பணக்கையாடல்கள் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மின்துறையில் 255 பணிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மின்துறை கட்டண வசூல் மோசமான திறனால் மார்ச் 2020ல் ரூ. 709.6 கோடி வசூலிக்க முடியாத நிலுவைத்தொகை இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று, வரிவிதிப்பு மற்றும் அனுமதிச்சீட்டு ஆகியவற்றுக்கு சேவைக் கட்டணமாக போக்குவரத்துத் துறையால் வசூலிக்கப்பட்ட ரூ.8.7 கோடி அரசு கணக்குக்கு வெளியே தனிக்கணக்கில் வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சுமார் 28 கோடி ரூபாய் அரசு பணம் திருடப்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.