சத்தீஸ்கர் பழங்குடிகளுக்கு சிஆர்பிஎஃப் கல்வித்தகுதி தளர்வு

சத்தீஸ்கர் பழங்குடிகளுக்கு சிஆர்பிஎஃப் கல்வித்தகுதி தளர்வு
சத்தீஸ்கர் பழங்குடிகளுக்கு சிஆர்பிஎஃப் கல்வித்தகுதி தளர்வு
Published on

400 பீஜப்பூர், தண்டேவாடா, சுக்மா பழங்குடியின இளைஞர்களை சிஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தென்மாவட்டங்களான பீஜப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப்-ல் 400 கான்ஸ்டபிள் (பொதுப் பணி) பதவிக்கு, கல்வித்தகுதியை தளர்த்தி தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 


இப்பணிக்கான கல்வித்தகுதியை பத்தாம் வகுப்பு தேர்ச்சியிலிருந்து எட்டாம் வகுப்பு என தளர்த்துவதென்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் யோசனைக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாவட்டங்கள் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று மாவட்டங்களின் உட்பகுதிகளிலும் ஆட்தேர்வு தொடர்பாக உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடுவது மட்டுமின்றி, அனைத்து வகைகளிலும், விரிவான விளம்பரம் செய்யப்படும். இந்த முடிவால் பீஜப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா மாவட்டங்களின் உட்பகுதிகளைச் சேர்ந்த 400 பழங்குடியின இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். இந்த ஆட்தேர்வுக்கான உடல் தகுதியிலும், தேவையான தளர்வுகளை உள்துறை அமைச்சகம் வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2016-17-ல் சிஆர்பிஎஃப்-பில் பழங்குடியின விண்ணப்பதாரர்களை சேர்த்து "பஸ்தாரியா பட்டாலியன்" படைப்பிரிவு உருவாக்கப்பட்ட போதிலும், இந்த மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர்கள் உரிய கல்வித்தகுதியான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களாக இருப்பதால் படைப்பிரிவு உருவாக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.  எனவே, மத்திய அமைச்சரவைக்கு கல்வித் தகுதியைத் தளர்த்த உள்துறை அமைச்சகம் பரிந்துரை அளித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com