பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்புதலின் மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் , ஸ்டேட் பேங்க் ஆப் பட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் ஜெய்பூர் ஆகிய ஐந்து வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்படவுள்ளன. இதன் மூலம் செலவீனம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறையும் என தெரியவந்துள்ளது. அதோடு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்க வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து துணை வங்கிகளை இணைப்பதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் சொத்துமதிப்பு சுமார் 37 லட்சம் கோடி ருபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கை மூலம் 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் 22,500 கிளைகள் மற்றும் 58 ஆயிரம் ஏடிஎம்கள் கொண்ட வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உருவெடுக்கும். இந்த நடவடிக்கை பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளோடு போட்டியிடும் வகையில் மேம்படுத்துவதற்கான ‘இந்திர தனுஷ்’ திட்டத்தின் ஒரு பகுதி என மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.